/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'வணிகர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் நகரும்'
/
'வணிகர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் நகரும்'
'வணிகர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் நகரும்'
'வணிகர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் நகரும்'
ADDED : மார் 24, 2025 06:31 AM
நாமக்கல்: ''வணிகர்களை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பிரகடன தீர்மானம் அறிவிக்க உள்ளோம்,'' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. அதில், மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், 42வது மாநில மாநாடு, வரும் மே, 5ல், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடக்கிறது. மாநாட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். வணிகர்களை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பிரகடன தீர்மானம் அறிவிக்க உள்ளோம்.
மாநகராட்சி, நகராட்சிகளின் வணிக கடைகளுக்கு வாடகை அதிகரித்தது குறித்து, அரசு சீர் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 'வாடகை உயர்வு தொடர்பாக சீர் செய்யப்படும்' என, கமிட்டி உறுதியளித்துள்ளது.ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வருவது உண்மை தான். அதே சமயம், ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள பிரச்னைகளை களைய, நாடு முழுவதும் உள்ள வணிகர்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம். எங்கள் தேவைகள், கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசியல் கட்சிக்கு, ஒரு கோடி வாக்குகள் நகரும்.
அரசியல் கட்சியுடன் கூட்டணி இல்லை. மத்திய, மாநில அரசுகளுடன் தான் கூட்டணி. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிறு கடைகளுக்கு மட்டுமே ஆய்வுக்கு செல்கின்றனர். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதில்லை. உணவு பாதுகாப்புத்துறை கையூட்டு வாங்குகின்றனர் என, முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.