/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்தை காக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
/
மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்தை காக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்தை காக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்தை காக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
ADDED : நவ 30, 2024 01:13 AM
நாமக்கல், நவ. 30-
'மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்தை காக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை தடை செய்ய வேண்டும்' என, இருக்கூர், மாணிக்கநத்தம் கிராம மக்கள், கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ப.வேலுார் தாலுகா, இருக்கூர், மாணிக்கநத்தம், வீரணம்பாளையம் பகுதிகளில், ராஜவாய்க்கால் நீரேற்று பாசனம் மூலம், காலம், காலமாக விவசாயம், கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் காமராஜ் நகரில், காலாவதியான கல்குவாரி நீர்நிலையில், பரமத்தி மற்றும் ப.வேலுார் டவுன் பஞ்., கழிவுநீரை குழாய் மூலம் கொண்டு வந்து நிரப்பி, சுத்திகரிப்பு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ப.வேலுார், பரமத்தி டவுன் பஞ்.,களில் தரிசு நிலங்கள் உள்ள நிலையில், விவசாய பகுதியை தேர்வு செய்து, விவசாயத்தையும், மக்களையும் அழிக்கும் திட்டமாக உள்ளது. கல்குவாரி நீர்நிலை பகுதியை சுற்றிலும், ஐந்து கிராமங்கள் உள்ளன. இதில், விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்த்தும் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
இந்த கல்குவாரி நீர்நிலை சுற்றி உள்ள நிலங்கள் அனைத்தும் விவசாய நிலங்களே. கல்குவாரி குழியில் மழைக்காலங்களில் நிறையும் நீர் மூலம், விவசாய கிணறுகள், ஆழ்துளை குழாய் கிணறு ஊற்றுகள் மூலம், வறட்சி காலத்தில் பயன்பெற்று வருகிறோம்.
இந்த கல்குவாரி நீர்நிலையில் கழிவுநீரை கொண்டு வந்து சேர்க்கும் போது, 5 கிராமங்களின் விவசாயம் பாழடைந்தும், குடிநீரில் கழிவுநீர் கலந்து எங்கள் உயிரையும், வாழ்வாதாரத்தையும் முற்றிலும் அழித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால், நீர்நிலையில் கழிவுநீரை தேக்கி சுத்திகரிக்க அனுமதிக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.