/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி
/
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 31, 2024 07:09 AM
நாமக்கல் : 'உடல் உறுப்பு தான தினம்' ஆண்டுதோறும் ஆக., 3ல் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தேசிய உறுப்பு மாற்று ஆணையம், தமிழக உறுப்பு மாற்று ஆணையம், மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. நாமக்கல் பழைய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சுமன், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி, மோகனுார் சாலை, டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, மணிக்கூண்டு வழியாக சென்று நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைவடைந்தது.
இதில், மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவியர், மருத்துவம் சாரா மாணவ, -மாணவிர், பிற தனியார் செவிலியர் கல்லுாரி மாணவ,- மாணவியர் என, 600க்-கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். அப்போது, உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து, பதாகைகள் ஏந்தியபடி கோஷம் எழுப்பி சென்றனர். தொடர்ந்து மாவட்டத்தில் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து நினைவு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரகுகுமரன், பேராசிரியர்கள், அரசு, தனியார் கல்லுாரி செவிலியர் பயிற்சி மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

