/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பலபட்டரை மாரியம்மன் கோவில் விழா இன்று நிறைவு
/
பலபட்டரை மாரியம்மன் கோவில் விழா இன்று நிறைவு
ADDED : ஆக 05, 2025 01:27 AM
நாமக்கல்,நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, மே, 12ல் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. அதை தொடர்ந்து, மறுகாப்பு, வடிசோறு, மாவிளக்கு, அபிஷேகம், ஆராதனை, அம்மன் அலங்காரம், ரத உற்சவம், அலகுகுத்துதல், பூவோடு எடுத்தல், பொங்கல், வசந்தோற்சவம், மஞ்சள் உற்சவம், கம்பம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
பின், விடையாத்தி கட்டளையாக பல்வேறு பகுதியினர், சமூகத்தினர் கொண்டாடினர். அதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், திருவீதி உலா நடந்தது. 85வது நாளான நேற்று, போதுப்பட்டி சாலை, சிங்கப்பூரார் நகர் பொதுமக்கள் சார்பில், சமயபுரம் மாரியம்மன், மாரியாயி, செல்லியாயி, விநாயகர், கருப்பண்ணசாமி அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடந்தது. இதில்
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் இறுதிநாளான இன்று, கோவில் அறங்காவலர் குழு, கோவில் பணியாளர்கள், முறை பூசாரிகள் சார்பில் பலபட்டரை மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மதியம், 12:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு சிறப்பு அலங்காரத்துடன், அம்மன் திருவீதி உலா நடக்கிறது.