/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பங்குனி முதல் ஞாயிறு: ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
/
பங்குனி முதல் ஞாயிறு: ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
ADDED : மார் 18, 2024 02:57 AM
நாமக்கல்: பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுவாமிக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு வருட பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், நேற்று, பங்குனி முதல் ஞாயிறையொட்டி, காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், தேன், நெய், சீயக்காய் துாள், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

