ADDED : ஏப் 19, 2026 06:04 AM
ராசிபுரம் :: ராசிபுரம் போலீஸ் மற்றும் துணை ராணுவ வீரர்கள் சார்பில், நேற்று கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது. ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார், நேற்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம், ராசிபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் புதிய பஸ் ஸ்டாண்ட், சேலம் சாலை, கடைவீதி மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் தங்களது கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுத்து சென்றனர்.
தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களது ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என்பதையும், அவர்களுக்கு தேவையான முழு பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. ஓட்டுச்சாவடிகளில் போதுமான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த அணிவகுப்பு அமைந்தது.
ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், ராசிபுரம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதி வழியாகச் சென்ற இந்த ஊர்வலம், மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறைவடைந்தது.
