/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாய ஆலை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை கிராம சபை கூட்டத்தில் மக்கள் ஆவேசம்
/
சாய ஆலை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை கிராம சபை கூட்டத்தில் மக்கள் ஆவேசம்
சாய ஆலை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை கிராம சபை கூட்டத்தில் மக்கள் ஆவேசம்
சாய ஆலை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை கிராம சபை கூட்டத்தில் மக்கள் ஆவேசம்
ADDED : ஆக 16, 2025 02:21 AM
பள்ளிப்பாளையம், 'களியனுார் பஞ்., பகுதியில் செயல்படும் சாய ஆலைகளால் குடிநீர் மாசடைந்து வருகிறது. இதை தடுக்க, பஞ்., நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என, கிராம சபை கூட்டத்தில் மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
பள்ளிப்பாளையம் யூனியன், களியனுார் பஞ்., சார்பில் களியனுார் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி தலைமை வகித்தார். பஞ்., செயலாளர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வரவில்லை. இதனால் அதிகாரிகள் வந்தால் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என, பொது மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மதியம், 12:00 மணிக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் வந்தனர். மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் வரவில்லை.
இருப்பினும், கூட்டம் நடத்த பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கூட்டம் துவங்கியது. கூட்டத்தில், 'ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்கள் கேள்வி கேட்டனர். இதற்கு அதிகாரிகள், ஒவ்வொன்றாக தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, அதிகாரிகள் பதில் தெரிவித்தனர்.
இதையடுத்து, 'சாய ஆலைகளில் இருந்து வெளிவரும் சாயக்கழிவுநீரால், ஆற்று தண்ணீர் மாசடைகிறது. ரசாயன நெடியால் மூச்சுவிட முடியவில்லை. பஞ்., நிர்வாகம், அதிகாரத்தை பயன்படுத்தி சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த பஞ்., செயலாளர், ''களியனுார் பஞ்சாயத்து பகுதியில், 27 சாய ஆலைகள் செயல்படுகின்றன. எல்லா சாய ஆலைகளும் விதிமுறை மீறி செயல்படுகிறது. இதுகுறித்து, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அலட்சியமாக இருந்து வருகின்றனர். பஞ்.,க்கு செலுத்த வேண்டிய வரிகளும், சாய ஆலைகள் சரியாக செலுத்துவதில்லை. ஆய்வு செய்து, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தெரிவித்தார்.