/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வளர்ச்சி அடையாத கொல்லிமலை சுற்றுலா தலம் அடிப்படை வசதி செய்து தர மக்கள் கோரிக்கை
/
வளர்ச்சி அடையாத கொல்லிமலை சுற்றுலா தலம் அடிப்படை வசதி செய்து தர மக்கள் கோரிக்கை
வளர்ச்சி அடையாத கொல்லிமலை சுற்றுலா தலம் அடிப்படை வசதி செய்து தர மக்கள் கோரிக்கை
வளர்ச்சி அடையாத கொல்லிமலை சுற்றுலா தலம் அடிப்படை வசதி செய்து தர மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 02, 2025 01:38 AM
சேந்தமங்கலம், தமிழகத்தின் முக்கிய மலைப்பிரதேச சுற்றுலா தலங்களுக்கு நிகரான வளர்ச்சியை கொல்லிமலை எட்ட, எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் சுற்றுலா தலமாக விளங்கும், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஏராளமான அபூர்வ மூலிகை செடிகள் நிறைந்துள்ளன. கொல்லிமலையை, 'சதுரகிரி' என்றும் அழைப்பர். இங்கு, அகத்தியர், திருமூலர், போகர், கரூவூரார், காலிங்கநாதர், புலிப்பாளி, சட்டநாதர் உள்ளிட்ட, 18 சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சான்றாக, ஏராளமான குகைகள் இங்கு அமைந்துள்ளன.
மேலும், ராஜராஜ சோழனின் மாமியார், செம்பியன்மாதேவி, அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு, நிவந்தங்கள்(தானம்) வழங்கியதாக, வரலாற்று சான்றுகள் உள்ளன. அதேபோல், சங்க இலக்கியமான குறுந்தொகை, புறநானுாறு, கலித்தொகையிலும், கொல்லிமலை இடம் பெற்றுள்ளது. கொல்லிமலை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட நாடாகவும் திகழ்கிறது. கடல் மட்டத்தில் இருந்து, 1,300 மீ., உயரம் கொண்ட இம்மலையின் உச்சி பகுதிக்கு செல்ல, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும்.
இங்கு, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில், வியூ பாயின்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் இடங்களாக அமைந்துள்ளன. ஆனால், அங்கு செல்ல சுற்றுலா பயணிகள் மட்டுமல்ல, உள்ளூர் வாசிகள் கூட ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், அடிப்படை வசதிகள் இல்லாததால், வாகனத்தில் சுற்றுலா வருவோர், வாகனத்தில் இருந்தபடியே சுற்றிப்பார்த்துவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கி விடுகின்றனர்.
இதுகுறித்து, கொல்லிமலை வாழ் மக்கள் கூறியதாவது:
கொல்லிமலையில், பழங்குடி மக்கள், 60,000 பேர் வசிக்கின்றனர். 40,000 பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். ஆனால், தமிழகத்தின் முக்கிய மலைப்பிரதேச சுற்றுலா தலங்களுக்கு நிகரான வளர்ச்சியை கொல்லிமலை எட்ட, எந்த முன்னெடுப்புகளும் நடக்கவில்லை. மற்ற சுற்றுலா தலங்களைபோல் மக்கள் பார்த்து ரசிக்க இங்கு பூங்காக்கள் ஏற்படுத்தப்படவில்லை. குறைந்த கட்டணத்தில் கழிப்பறை, குளியலறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. தனியார் விடுதிகள் இருந்தாலும், அவற்றின் கட்டணம் அதிகமாக இருப்பதால் சாதாரண மக்கள் தங்க முடியவில்லை. உணவகங்களும் சரியான பயன்பாட்டில் இல்லை. மற்ற மலைப்பிரதேசங்களில் அருகருகே பார்வையிடும் வகையிலான சுற்றுலா தலங்கள் உள்ளன. ஆனால், கொல்லிமலையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல குறைந்தபட்சம், 8 முதல், 10 கி.மீ., கடக்கும் நிலை உள்ளது. அதற்கு தேவையான அளவில் பஸ் வசதியில்லை.
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல, 1,296 படிக்கட்டுகள் உள்ளன. அங்கு சென்றபின், 300 அடி உயரத்தில் இருந்து கொட்டும் அருவியை கண்டு ரசிக்கலாம். ஆனால், 1,296 படிக்கட்டுகளை சிரமப்பட்டு கடந்த பின், 100 மீட்டர் தொலைவில் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மிகவும் கரடுமுரடாக காணப்படுகிறது.
இதனால், சுற்றுலா பயணிகள் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. அதனால், அந்த இடத்தில் இரும்பு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கான வசதிகள் இல்லாததால், இங்குள்ள பழங்குடியின மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மே மாதம் கோடை விழா?
மற்ற மலைப்பிரதேசங்க ளில், மே மாதத்தில் கோடை விழா, மலர், பழ கண்காட்சி நடப்பதைபோல், கொல்லிமலையிலும் கோடை விழா நடத்தினால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கக்கூடும். இதனால், மலைவாழ் மக்கள் பொருளாதார ரீதியாக பயனடைவர். தற்போதைய நிலையில், ஆடிப்பெருக்கு விழாவுடன், 'வல்வில் ஓரி' விழா நடத்தப்படுகிறது. மே மாதம் கோடை விழா, ஆக., மாதம், 'வல்வில் ஓரி' விழா என இரண்டையும் அரசே நடத்தினால், கொல்லிமலை சுற்றுலா தலம் வளர்ச்சிப்பாதைக்கு செல்லும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.