ADDED : ஜன 14, 2024 12:29 PM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கடந்த, 30 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இதையடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. புதியதாக குடிநீர் வழங்கும் பகுதிகளிலும், புதிய பைப்புகள் அமைத்து குடிநீர் இணைப்பு வழங்கினர். பிற்பட்ட வகுப்பினர், கட்டுமான செலவில், 10 சதவீதமும், தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்கள், 5 சதவீதம் தொகையும் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.
இந்நிலையில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொப்பப்பட்டி கடைவீதி பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தில் புதிய பைப்புகள் இணைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம், 10ம் தேதி இப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்குவதாக கூறி சாலையோரங்களில் குழி பறித்தனர். பழைய குடிநீர் இணைப்புகளை அகற்றிவிட்டு, புதிய இணைப்பு வழங்குவதாக கூறினர். ஆனால், ஒரு மாதமாகியும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.
இதனால், பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைவீதியில் சாலையோரம் வெட்டியிருப்பதால், தண்ணீர் வண்டிகளும் உள்ளே வர சிரமமாக உள்ளது. இப்பகுதியில் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், ஓய்வூதியதாரர்கள் தண்ணீர் எடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, கடைவீதி பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

