/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கு.பாளையம், ப.பாளையம், மோகனுார், ப.வேலுார் பகுதி காவிரியில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி
/
கு.பாளையம், ப.பாளையம், மோகனுார், ப.வேலுார் பகுதி காவிரியில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி
கு.பாளையம், ப.பாளையம், மோகனுார், ப.வேலுார் பகுதி காவிரியில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி
கு.பாளையம், ப.பாளையம், மோகனுார், ப.வேலுார் பகுதி காவிரியில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி
ADDED : ஆக 19, 2025 03:25 AM
நாமக்கல், ''விநாயகர் சிலைகளை கரைக்க, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், மோகனுார், ப.வேலுார் ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆற்றுப்பகுதி படித்துறைகளில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என, ஆய்வு கூட்டத்தில், கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் நடந்தது. எஸ்.பி., விமலா முன்னிலை வகித்தார். கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: விநாயகர் சிலை வைக்க, ஆர்.டி.ஓ.,விடம் முன்கூட்டியே தடையின்மை சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும். சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்துச்செல்லும்போது, பிற மதத்தினருக்கு பாதிப்பில்லாத வகையில் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும்.
மாவட்டத்தில் பதற்றமான இடங்களில், போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். களிமண்ணால் செய்த, சுடப்படாத, ரசாயன கலவையற்ற கிழங்குமாவு, மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை திடக்கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற மாசு விளைவிக்கும் ரசாயனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலைக்கான பாதுகாப்பு கூடம், தீப்பற்றாத உபகரணங்கள் கொண்டு அமைக்க வேண்டும்.
விநாயகர் சிலையின் உயரம், 10 அடிக்கு மேல் உயர்த்தி அமைக்க கூடாது. மதம் தொடர்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைப்பதை தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலைகளை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அடையாளமிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிப்பாளையம், மோகனுார், ப.வேலுார் ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆற்றுப்பகுதிகளில், படித்துறைகளில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ.,க்கள் அங்கீத்குமார் ஜெயின், சாந்தி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.