ADDED : ஏப் 28, 2024 04:15 AM
நாமக்கல்: நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள ஏ.மேட்டுப்பட்டி கிராமத்தில், 1,000 ஆண்டு பழமையான ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.
விழாவிற்கு, தொழிலதிபர் தயாளன் தலைமை வகித்தார். பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், எம்.மேட்டுப்பட்டி பஞ்., தலைவர் சரவணகுமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, விழாவை துவக்கி வைத்தனர்.
கொங்குநாட்டு வேளாளர் அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, கோவில் அர்ச்சகர் பிச்சுமணி, அறங்காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உழவாரப்பணியை துவக்கி வைத்தனர். கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் குருவாயூரப்பன், ராமர் கோவில் தல வரலாறு குறித்து விளக்கினார். தொடர்ந்து, கோவிலை சுற்றிலும், கிருஷ்ணர், ராமர், கண்ணன் ஆகிய சுவாமிகளுக்கு உகந்த நெல்லி, புன்னை, நாவல், மகிழம், இழுப்பை, துளசி மற்றும் நந்தவன மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

