/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருவிழா நடத்துவதில் தகராறு கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு
/
திருவிழா நடத்துவதில் தகராறு கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு
திருவிழா நடத்துவதில் தகராறு கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு
திருவிழா நடத்துவதில் தகராறு கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஆக 07, 2025 01:35 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார், ஈஸ்வரன் கோவில் வீதி அருகே, நீதிகாத்த மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, திருவிழா நடத்த, நேற்று முன்தினம் இரவு கம்பம் நடும் விழா நடந்தது. அதில், ஒரு தரப்பினர், தை மாதத்திலும், மற்றொரு தரப்பினர் ஆடி மாதத்திலும் திருவிழா நடத்த வேண்டுமென கூறி வந்தனர்.
இந்நிலையில், ஒருதரப்பினர், திருவிழா நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால், மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்தக்கூடாது என, தடுத்தனர். இதனால் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, வெண்ணந்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ராசிபுரம் தாசில்தார் சசிகுமார், ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார், வெண்ணந்துார் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே ஒரு தரப்பினர், கோவிலில் கம்பம் நட்டு விழாவை தொடங்கினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், வருவாய் துறையினர் கோவிலுக்கு சென்று, நடப்பட்ட கம்பத்தை பிடுங்கி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பொதுமக்களிடையே பதற்றம் ஏற்படுவதை தடுக்க, நீதிகாத்த மாரியம்மன் கோவில் மற்றும் செல்வ மாரியம்மன் கோவில் ஆகிய, இரண்டு தரப்பு கோவில்களிலும் பலத்த போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.