/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொத்தனுார் டவுன் பஞ்.,ல் சாக்கடை அமைக்க கோரிக்கை
/
பொத்தனுார் டவுன் பஞ்.,ல் சாக்கடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2025 01:21 AM
நாமக்கல், 'பொத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட லட்சுமி நகர், அம்மன் நகரில், கழிவுநீர் சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ப.வேலுார் தாலுகா, பொத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட லட்சுமி நகரில், 35 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனைகள் பிரித்து, அதற்கு அனுமதியும் பெறப்பட்டு பஞ்.,க்கு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி குடியிருந்து, பஞ்.,க்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் அனைத்தும் செலுத்தி வருகிறோம். அவ்வப்போது, தார்ச்சாலை, பேவர் பிளாக் கல் பதித்து சாலை அமைத்து கொடுத்தனர். ஆனால், மக்களின் அடிப்படை தேவையான கழிவுநீர் சாக்கடை வசதி, 35 ஆண்டுகளுக்கு செய்துதரவில்லை. கழிவுநீர் சாலையில் வெளியேறுவதால், பக்கத்துவீட்டாரிடம் தகராறு ஏற்பட்டு வருகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும், கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது.
அதேபோல், அம்மன் நகரில், 20 ஆண்டுகளுக்கு முன், வீட்டுமனைகள் அமைத்து, பஞ்., நிர்வாகம் சார்பில் தார்ச்சாலை, குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது. ஆனால், கழிவுநீர் சாக்கடை அமைக்காததால், சாலையில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, லட்சுமி நகர், அம்மன் நகரில், கழிவுநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.