ADDED : ஏப் 05, 2026 04:48 AM
பள்ளிப்பாளையம் : குமாரபாளையம் தொகுதியில் பெரும்பாலான தொழிலாளர்கள், வேட்பாளர்களுடன் பிரசாரத்துக்கு செல்வதால், விசைத்தறி, கட்டுமான பணிக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் தொகுதியில் விசைத்தறி பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக, விசைத்தறி, கட்டுமானம் மற்றும் சாய ஆலைக்கு அதிகளவு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது, தேர்தல் நடப்பதால் பிரசார கூட்டத்திற்கு மற்றும் குடியிருப்பு பகுதியில் ஓட்டு சேகரிப்பு போன்றவற்றிக்கு சென்றால், 200 முதல், 500 ரூபாய் வரை பணம் வழங்குகின்றனர். டூவீலரில் சென்றால் பெட்ரோல் போட்டு, பணமும் தரப்படுகிறது. நேரமும் குறைவு என்பதால், ஆர்வமுடன் செல்கின்றனர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் பிரசாரத்துக்கு செல்வதால், விசைத்தறி உள்ளிட்ட பல வேலைகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கட்சி பாகுபாடின்றி யார் அழைத்தாலும் செல்கின்றனர். தேர்தல் முடியும் வரை இதே நிலை தான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விசைத்தறி, சாயப்பட்டறைகள், கட்டுமான பணி நடக்காமல் விடுமுறை விடப்பட்டுள்ளது.
