ADDED : மே 18, 2026 01:29 AM
ராசிபுரம்:தமிழகத்தில்,
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், வரும், 20ல் வெளியாக உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்து
வருகிறது.
இந்நிலையில், அன்றைய தினம் ராசிபுரம் பகுதியில்
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுவதாக
மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த
அறிவிப்பு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்வு
முடிவு வெளியாகும் நாளில் மின்சாரத்தை நிறுத்தினால் மாணவர்கள்
கடுமையாக பாதிக்கப்படுவர். குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து
வரும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவர். எனவே, மாணவர்களின் நலன்
கருதி, 20ல் அறிவிக்கப்பட்டுள்ள மின்தடையை ரத்து செய்துவிட்டு,
வேறு ஒரு நாளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, நமது
நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, 10ம் வகுப்பு
மாணவர்கள் நலன் கருதி மின்தடை, 20ம் தேதி நடக்காது என மின்வாரியம்
அறிவித்துள்ளது. மேலும், மின்தடை தேதி பின்னர் அறிவிக்கப்படும்
எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
