ADDED : டிச 09, 2024 07:11 AM
எருமப்பட்டி: எருமப்பட்டியை சுற்றியுள்ள அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி பூக்கள் பயிரிட்டுள்ளனர். இந்த பூக்களை விவசாயிகள் பறித்து, தினமும் நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் பூ மார்க்கெட்டுகளுக்கு ஏலத்திற்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தொடர் மழையால், குண்டுமல்லி பூக்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.
ஆனால், முகூர்த்த தினம் என்பதால், கடந்த, 3 வாரமாக குண்டுமல்லி கிலோ, 1,000 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த, 5ல் கார்த்திகை மாத கடைசி முகூர்த்த தினம் என்பதால், அதற்கு முன்தினம், 1,700 ரூபாய்க்கு விற்ற குண்டுமல்லி, தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் கிலோ, 700 ரூபாய்க்கு விற்ற குண்டுமல்லி, நேற்று, 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.