/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாம்பல் பூசணி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு
/
சாம்பல் பூசணி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு
ADDED : ஆக 24, 2025 12:42 AM
ப.வேலுார், :பரமத்தி வேலுார் தாலுகாவுக்குட்பட்ட பரமத்தி, மாவுரெட்டி, அர்த்தநாரிபாளையம், கந்தம்பாளையம், வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் சாம்பல் பூசணி சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளையும் பூசணிகளை, கேரளா, தமிழக வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர்.
இரண்டு மாதத்திற்கு முன், ஒரு கிலோ சாம்பல் பூசணி, 10 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை விற்றதால், அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்தனர். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விற்பனை குறைந்து விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. சாம்பல் பூசணி கிலோ, 2 முதல், 3 ரூபாய் வரை மட்டுமே விற்பதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
சாம்பல் பூசணி சாகுபடிக்கு ஏக்கருக்கு, 40,000 முதல், 50,000 ரூபாய் வரை செலவாகிறது. சாகுபடி காலம், 90 நாட்களாகும். 70வது நாள் முதல் அறுவடை துவங்கும். ஒரு ஏக்கருக்கு சராசரியாக, 15 டன் மகசூல் கிடைக்கிறது. சாம்பல் பூசணி நடப்பாண்டு நன்றாக செழித்து வளர்ந்து விளைச்சல் பெருகியுள்ளது. ஆனால், மொத்த வியாபாரிகள் சொற்ப விலைக்கு வாங்கி செல்வது ஏமாற்றம் அளிப்பது மட்டுமின்றி, எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. தற்போது, விலை சரிவை சந்தித்துள்ளதால், விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினர்.