பரமத்திக்குள் செல்ல மறுத்த தனியார் பஸ் சிறைபிடிப்பு
பரமத்திக்குள் செல்ல மறுத்த தனியார் பஸ் சிறைபிடிப்பு
ADDED : மே 19, 2026 02:05 AM

ப.வேலுார்:கரூர்
பஸ் ஸ்டாண்டிலிருந்து, சேலம் செல்லும் தனியார் பஸ்சில் பயணிகள்,
50க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை, 5:00 மணிக்கு அமர்ந்திருந்தனர்.
இதில், பரமத்தி செல்ல, பத்துக்கும் மேற்பட்ட பயணிகளும்
அமர்ந்திருந்தனர். நேற்று, தனியார் பஸ்சில் டிரைவர் நாகராஜ், 40,
கண்டக்டர் ஜெயபிரகாஷ், 36, ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது,
'பரமத்தி நகருக்குள் பஸ் செல்லாது எனவும், பைபாஸில் பயணிகள்
இறங்கிக்கொள்ளவும்' என தெரிவித்தனர்.
இதனால் ஆவேசமடைந்த
பயணிகள், பஸ் கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பஸ்சில் பயணித்த பயணிகள், பரமத்தியில் உள்ள
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். மாலை,
6:00 மணிக்கு பரமத்தி பைபாஸ் சாலையில் பஸ் சென்றபோது, அங்கு
காத்திருந்த பரமத்தியை சேர்ந்த பொதுமக்கள், பஸ்சை சிறைபிடித்து
பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.
இதனால், பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்ட பஸ் டிரைவர், கண்டக்டர்
இருவரும், பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். மேலும், தனியார்
பஸ்சை பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர்
தொடர்ந்து, பரமத்தி
பைபாஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்ட பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர்
பிரபாகரன், ''ப.வேலுாரில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார், அரசு
பஸ்கள் பரமத்தி நகருக்குள் சென்று நாமக்கல் செல்ல வேண்டும் என,
அறிவுறுத்தினார். மேலும், பரமத்தி நகருக்குள் செல்லாத பஸ்கள் மீது
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரிக்கை விடுத்தார். இதனால்
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
