/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.9.65 லட்சத்தில் நலத்திட்ட உதவி
/
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.9.65 லட்சத்தில் நலத்திட்ட உதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.9.65 லட்சத்தில் நலத்திட்ட உதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.9.65 லட்சத்தில் நலத்திட்ட உதவி
ADDED : நவ 11, 2025 02:16 AM
நாமக்கல், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 72 பயனாளிகளுக்கு, 9.65 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 557 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தாட்கோ சார்பில், துாய்மை பணியாளர் நல வாரியம் மூலம் ஒருவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் விபத்து காப்பீடு, 10 துாய்மை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரிய அடையாள அட்டை, 2022-23, 2023-24, 2024-25ம் கல்வியாண்டுகளில், சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 12 தலைமையாசிரியர்களுக்கு, 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் காசேலைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 12 பேருக்கு, 95,090 ரூபாய் மதிப்பில், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், சக்கர நாற்காலி, 3 பேருக்கு, 19,500 ரூபாய் மதிப்பில் விலையில்லா சலவை பெட்டி வழங்கப்பட்டன.
மேலும், தேசிய காசநோய் தடுப்பு கழகம் சார்பில், 75-வது காசநோய் வில்லைகளை முழுமையாக விற்பனை செய்து சாதனை செய்த, 34 துறைத்தலைவர்களை பாராட்டும் வகையில், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 76-வது காசநோய் வில்லைகளை, 48 அரசு துறை தலைவர்களுக்கும் பிரித்து வழங்கும் வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து, 23வது ஆசிய மூத்தோர் கடகள சாம்பியன்ஸ் போட்டியில், குண்டு, வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் வென்ற, 2 பேர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
டி.ஆர்.ஓ., சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, காசநோய் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் வாசுதேவன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

