ADDED : ஜூலை 22, 2025 01:49 AM
நாமகிரிப்பேட்ட, நாமகிரிப்பேட்டை பகுதியில் தொடர் மழையால், அப்பள உற்பத்தி பாதிக்கப்பட்டுள்து.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், கடந்த, இரண்டு வாரங்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து மாலை நேரத்தில் துாறல் மழை பெய்து வந்தது. பகலில் மழை இல்லை என்றாலும், வெயில் குறைந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு மாவில் அப்பளம் உற்பத்திசெய்வது மிகவும் பிரபலம். இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிசை தொழிலாக அப்பள உற்பத்தியை செய்து வருகின்றனர். வேகவைத்து, வெயிலில் நன்றாக காய வைத்துதான் அப்பளம் தயாரிக்கப்படுகிறது.
தொடர் மழை காரணமாக நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதியில் அப்பளம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பள குடோன்கள் மூடப்பட்டுள்ளன. தொழில் முடங்கியதால் அப்பள தொழிலாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தொடர் வேலை இழப்பால் தொழிலாளர்கள் விவசாய கூலி வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
அதேபோல், உற்பத்தியான அப்பளத்தை உலர வைக்க முடியாததால் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் அப்பள உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர். வெயில் நன்றாக அடிக்க தொடங்கிய பின், ஒரு வாரத்திற்கு பின்தான் அப்பளத்தை பேக்கிங் செய்ய முடியும் என்று அப்பள உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

