ADDED : அக் 02, 2025 02:23 AM
ப.வேலுார், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலை, நான்கு ரோடு, சுல்தான்பேட்டை பகுதிகளில் அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறடிக்கப்படுவதாக, நேற்று முன்தினம் படத்துடன் நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம், அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தினர்.ஆனால், அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் பிளக்ஸ் பேனர்களை அகற்றாமல் அடம் பிடித்தனர். தொடர்ந்து அகற்ற மறுத்து, டவுன் பஞ்., ஊழியர்களுக்கு, அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து ப.வேலுார் டவுன் பஞ்., அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அனுமதியற்ற, இருபதுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை துாய்மை பணியாளர்களைக் கொண்டு அதிரடியாக நேற்று அகற்றினர். மேலும், அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகளை வைத்தால் தொடர்ந்து அகற்றப்படும் என, அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு டவுன் பஞ்., அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.