ADDED : ஜூன் 20, 2025 01:46 AM
வெண்ணந்துார்,  வெண்ணந்துார் ஒன்றியம், செம்மாண்டப்பட்டி ஊராட்சியில் கானம்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி குடித்தெரு, தேவேந்திரர் தெரு, அருந்ததியர் தெரு உள்ளிட்ட, 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த, 10 ஆண்டுகளாக சாலை, தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, மோசமான நிலையில் உள்ளது. பஸ்கள்  செல்ல வசதியற்ற கிராம பகுதி என்பதால், சாலை சீரமைப்பின்றி உள்ளதை காரணம் காட்டி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர். மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், அடிக்கடி டயர் பஞ்சர் ஆவதால், மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
எனவே, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில், புதிதாக தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

