/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாக்கடை அமைக்க கோரிக்கை நெடுஞ்சாலை பணி பாதிப்பு
/
சாக்கடை அமைக்க கோரிக்கை நெடுஞ்சாலை பணி பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2025 01:43 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியம், அத்தனூர் டவுன் பஞ்., 4,5 வார்டுகள், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகளிலும், 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 4-வது வார்டு பகுதியில், சாக்கடை வசதி அமைக்காமல், நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்து சாலை விரிவாக்கம் செய்யும் பணி, பொக்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பொக்லைன் வாகனத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாலை விரிவாக்கம் செய்யும் பணி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஐந்தாவது வார்டு பகுதியில் இருந்து, நான்காவது வார்டு பகுதியானது மிகவும் பள்ளமாக அமைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் சாக்கடை வசதி இல்லாததால், மழை நீருடன், சாக்கடை கழிவுகளும், விஷ ஜந்துக்களும் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, சாக்கடை வடிகால் கால்வாய் அமைத்த பிறகு, சாலை விரிவாக பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.