/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மினி பஸ் ரூட்டை நீட்டிக்க கோரிக்கை; 3 ஆண்டாக தவிக்கும் உரிமையாளர்கள்
/
மினி பஸ் ரூட்டை நீட்டிக்க கோரிக்கை; 3 ஆண்டாக தவிக்கும் உரிமையாளர்கள்
மினி பஸ் ரூட்டை நீட்டிக்க கோரிக்கை; 3 ஆண்டாக தவிக்கும் உரிமையாளர்கள்
மினி பஸ் ரூட்டை நீட்டிக்க கோரிக்கை; 3 ஆண்டாக தவிக்கும் உரிமையாளர்கள்
ADDED : நவ 20, 2024 07:44 AM
ராசிபுரம்: மினி பஸ் ரூட்டை நீட்டிக்க கோரிக்கை விடுத்தும், அரசிடமிருந்து எந்த உத்தரவும் வராததால், கடந்த, 3 ஆண்டாக பஸ் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், கடந்த, 1996-2001ல், தி.மு.க., அரசு காலத்தில் தான் மினி பஸ் பர்மிட்டுகள் வழங்கப்பட்டன. மாவட்டத்திற்கு, 250 வண்டிகள் வரை என, 7,500க்கும் மேற்பட்ட மினி பஸ் பர்மிட்டுகள் வழங்கப்பட்டன. தொடக்கத்தில், 20 கிலோ மீட்டர் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 4 கிலோ மீட்டர் பிரதான சாலையிலும், 16 கிலோ மீட்டர் பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களிலும் இயக்க பர்மிட்டுகள் கிடைத்தன. நாளடைவில், கிராமங்களில் சாலை தரம் உயர்ந்ததால், டூவீலர் பயன்பாடு உயர்ந்தது. இதனால் மினி பஸ் பயணிகள் எண்ணிக்கை குறைய தொடங்கியது. அதேசமயம் இன்சூரன்ஸ், டீசல் விலை உயர்வால் லாபமும் குறைந்து மினி பஸ் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், பலர் பர்மிட்டுகளை ஒப்படைக்க தொடங்கினர். இந்நிலையில், சரிவடைந்த தொழிலை சரி செய்ய, 35 கிலோ மீட்டர் துாரம் மினிபஸ் இயக்க அனுமதிக்க வேண்டும் என, உரிமையாளர்கள் சமேளனம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிவேல் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், நகரில், 80, ராசிபுரத்தில், 43 உள்பட, 250க்கும் மேற்பட்ட மினி பஸ்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது நாமக்கல் நகரில், 7, ராசிபுரத்தில், 3, குமாரபாளையத்தில், 4 என மொத்தம், 14 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது.
தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு, மினி பஸ் ரூட்டையும் நீட்டித்து தர கோரிக்கை விடுத்துள்ளோம். 20 கிலோ மீட்டர், பஸ் பயன்பாடில்லாத சாலையிலும், 15 கிலோ மீட்டர் பிரதான சாலையிலும் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியிலேயே மினி பஸ் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதை நம்பி கடந்த, 3.5 ஆண்டுகளாக காத்திருந்து ஏமாந்துவிட்டோம். பல முறை இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தும் பெரிய பஸ் உரிமையாளர்கள் குறுக்கீடு செய்வதால் தீர்வு காணாமல் தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.