/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பசுமை பரப்பை அதிகரிக்க அதிகளவில் மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டுகோள்
/
பசுமை பரப்பை அதிகரிக்க அதிகளவில் மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டுகோள்
பசுமை பரப்பை அதிகரிக்க அதிகளவில் மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டுகோள்
பசுமை பரப்பை அதிகரிக்க அதிகளவில் மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டுகோள்
ADDED : ஏப் 24, 2025 01:40 AM
நாமக்கல்:'மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்' என, முகாமில் கலெக்டர் உமா வலியுறுத்தினார்.
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், வேளாண் மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், நேற்று நடந்தது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றம் காரணமாக, இயற்கைக்கு மாறாக எப்போதும் இல்லாத வகையில், அதிகளவில் வெப்பம், அதிகளவில் மழை பொழிவு, வறட்சி, மேக வெடிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக விவசாயத்தில், பயிர்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், மண் வளம் பாதித்து, மண்ணின் தன்மை குறைந்து, பயிர்களின் உற்பத்தி பாதிப்பதுடன், விலைவாசியில் மாற்றம் ஏற்படுகிறது.
அதனால், விவசாயிகள் மழைப்பொழிவிற்கு ஏற்றவாறு காலநிலையை பொருத்து, தரமான விதைகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிரிட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், பசுமை பரப்பை, 33 சதவீதம் அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

