/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை விபத்து வழக்கு; ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
/
சாலை விபத்து வழக்கு; ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
சாலை விபத்து வழக்கு; ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
சாலை விபத்து வழக்கு; ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : டிச 20, 2024 06:59 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்து வழக்கில் முதன்முறையாக, நாமக்கல் மாவட்ட நீதிமன்ற சமரச மையத்தில், 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கவுதம், 35. இவர் துபாயில் உள்ள அபுதாபியில் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுஸ்மிதா என்ற மனைவியும், 9 வயதில் யாஷ்வினி என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்டு, 29ம் தேதி அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனை பார்க்க ஆகஸ்டு, 30ம் தேதி துபாயில் இருந்து கவுதம் வந்தார். செப்.,12ம் தேதி நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த கவுதம், மகளை பள்ளியில் கொண்டு விடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றார். நாமக்கல்-திருச்சி சாலை, நாகராஜபுரம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவுதம் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவுதம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கவுதம் குடும்பத்தினர் இழப்பீடு வழங்கக்கோரி நாமக்கல் மோட்டார் வாகன விபத்து காப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், கடந்த 14-ஆம் தேதி நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து காப்பீட்டு வழக்குகளும், உரிமையியல் வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
இந்த சிறப்பு அமர்வில் ஓய்வுபெற்ற நீதிபதி நல்லதம்பி, வக்கீல்கள் அய்யப்பன், சங்கர் ஆகியோர் சமரசம் செய்து வழக்குகளுக்கு தீர்வு ஏற்படுத்தினர். இந்த அமர்வில் இறந்து போன கவுதம் தரப்பில் வக்கீல் வடிவேல் பங்கேற்றார். இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் இறந்து போன கவுதம் குடும்பத்திற்கு, 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதை கவுதம் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதால், இந்த வழக்கில் சமரச தீர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, 5 கோடி ரூபாய் இழப்பீடு தொகை பெறுவதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, இறந்து போன கவுதம் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வேலுமயில் உடன் இருந்தார்.
இது குறித்து வக்கீல் வடிவேல் நிருபர்களிடம் கூறியதாவது: இறந்து போன கவுதம் மாதம் ஒன்றுக்கு இந்திய ரூபாய் மதிப்புபடி, 3.25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். அந்த அடிப்படையில், 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சமரசம் ஆகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இன்றி, தமிழக அளவில் விபத்து வழக்கு ஒன்றில், தாக்கல் ஆன 9 மாத காலத்தில் அதிகப்படியான தொகை, அதாவது, 5 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்து சமரசம் ஏற்படுத்தப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. இவ்வாறு அவர் கூறினார்.