/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேலம் மண்டல அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
/
சேலம் மண்டல அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
ADDED : ஜன 24, 2025 04:10 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் பயிற்சி பிரிவு மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் சார்பாக, மண்டல அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வரும், 31ம் தேதி நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தட்டான்குட்டை, கீரம்பூர் வளாகத்தில் காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ளது.சேலம் மண்டலத்தில் உள்ள நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுனர் சட்டம்-1961ன் கீழ் தொழிற்பழகுனர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ., பயிற்சி பெற்றவர்கள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பொறியியல், டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே அரசு, தனியார் ஐ.டி.ஐ., யில் பயிற்சி பெற்றுள்ள பயிற்சியாளர்கள் தொழிற்பழகுனர் பயிற்சியில் சேர்ந்து, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம். மேலும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் அதற்கு மேலும் கல்வித் தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரண்டீஸாக சேர்ந்து தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறலாம். பொறியியல், டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் ஆப்சனல் பிரிவுகளில் ஓராண்டு தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று வழங்கும் அப்ரண்டீஸ்சிப் சான்றிதழ் பெறலாம்.
சான்றிதழ் பெறுபவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. பயிற்சிக்கு மாதாந்திர உதவி தொகையாக, 8,500 முதல், 18,000 ரூபாய் வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வரும், 31ம் தேதி அன்று நாமக்கல், தட்டான்குட்டை, கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ள சேர்க்கை முகாமில் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விபரம் பெற, 79041-11101, 90802-42036, 94877-45094 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

