ADDED : நவ 17, 2026 04:53 AM
எலச்சிபாளையம்: நாமக்கல் வேளாண் கல்லுாரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள், தங்கள் இறுதியாண்டு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புற அனுபவ வேளாண் பயிற்சி மேற்கொள்ள, எலச்சிப்பாளையம் வட்டாரத்திற்கு வருகை புரிந்தனர்.
அங்கு, நேற்று, பட்டுப்புழு வளர்ப்பு, புதிய தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இத்தொழில், கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இத்தொழிலின் முதல் படியாக பட்டுப்புழுக்களின் முதன்மை உணவான மல்பெரி இலைகளை தரமாக உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு செம்மண் மற்றும் கரிசல் மண் மிகவும் ஏற்றதாகும். பட்டுப்புழுக்களை வளர்க்க நல்ல காற்றோட்டமும், சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதமும் கொண்ட தனி வளர்ப்பு மனை அவசியம். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களுக்கு நறுக்கிய மல்பெரி இலைகளை உணவாக அளித்து, அவை கூடு கட்டும் நிலை வரை மிகுந்த சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும் என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர்.
