/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்த மருத்துவ நாள் நாமக்கல்லில் மூலிகை கண்காட்சி துவக்கம்
/
சித்த மருத்துவ நாள் நாமக்கல்லில் மூலிகை கண்காட்சி துவக்கம்
சித்த மருத்துவ நாள் நாமக்கல்லில் மூலிகை கண்காட்சி துவக்கம்
சித்த மருத்துவ நாள் நாமக்கல்லில் மூலிகை கண்காட்சி துவக்கம்
ADDED : டிச 15, 2024 01:24 AM
நாமக்கல், டிச. 15-
எட்டாவது சித்த மருத்துவ திருநாளையொட்டி, நேற்று நாமக்கல்லில் மூலிகை கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், 8-வது சித்த மருத்துவ திருநாள் விழாவை முன்னிட்டு, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் உடல் ஆரோக்கிய தின வாழ்வியலில் சித்த மருத்துவம் குறித்த மூலிகை கண்காட்சி, நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
சித்த மருத்துவத்தின் தந்தை, அகத்திய முனிவரின் பிறந்த மாதத்தில் தேசிய சித்த மருத்துவ திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 8-வது சித்த மருத்துவ திருநாள் விழாவை முன்னிட்டு, இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் உடல் ஆரோக்கிய தின வாழ்வியலில் சித்த மருத்துவம் குறித்த மூலிகை கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், சர்க்கரை நோய், அதிகுருதி அழுத்தம், குழந்தையின்மை, வர்மம் முத்திரைகள், கழுத்து, இடுப்பு, முழங்கால் வலி-மூலிகை தைலம் தடவி ஒற்றடம், பற்று போடுதல், வாதம், பித்தம், கபம், தேக அடிப்படையில் நோய் சிகிச்சை, துாக்கமின்மைக்கு சிரதாரை சிகிச்சை, கண், சுவாச மண்டலத்தை காக்க நசியம், கலிக்கம், உணவே மருந்தாக்கும் பயிற்சி, சித்த மருத்துவ பரிசோதனைகளான நாடி, மணிக்கடை நுால், சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி கொண்டு, தங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை மேயர் பூபதி, மருத்துவமனை பணிகளின் இணை இயக்குனர் ராஜ்மோகன், உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் தமிழச்செல்வன், சர்வேஷ் பாபு, அட்மா திட்ட தலைவர் நவலடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.