ADDED : ஏப் 28, 2024 04:14 AM
மது விற்ற 3 பேர் கைது
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குமாரபாளையம் போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, எம்.ஜி.ஆர்., நகர் காஸ் பங்க் பின்புறம் மது விற்றுக்கொண்டிருந்த, சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி, 51, கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சக்திவேல், 23, ஆகிய இருவரை கைது செய்து, 130 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், ராஜம் தியேட்டர் பின்புறம் மது விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 46, என்பவரை கைது செய்து, 177 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கிணற்றில் விழுந்த பசு மீட்புகுமாரபாளையம்: வெப்படை அருகே, புது மண்டபத்துார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 45. இவருக்கு சொந்தமான பசு மாடுகள், வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அதில் ஒரு மாடு நிலை தடுமாறி, விவசாய கிணற்றில் விழுந்தது. தகவலறிந்து வந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர், ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை மீட்டனர். அப்பகுதியினர் மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மணல் திருட்டு
3 டூவீலர் பறிமுதல்
ப.வேலுார், ஏப். 28--
ப.வேலுார் அருகே, பொத்தனுார் காவிரி ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, எஸ்.ஐ., குமார் மற்றும் போலீசார் காவிரி ஆற்றில், நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மணல் திருட்டு ஈடுபட்டிருந்த, 3 பேரும் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின், அங்கு மணல் மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த, 3 டூவீலர்களை பறிமுதல் செய்து, தப்பியோடிய மூவரை, ப.வேலுார் போலீசார் தேடி வருகின்றனர்.
குடும்பம் நடத்த மனைவி வராததால்மச்சினனை தாக்கியவருக்கு 'காப்பு'
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, ஒழுகூர்பட்டியை சேர்ந்த சிக்கத் மகன் யுவராஜ், 32. இவரது தங்கை வனிதா, 28. இவரை, அதே பகுதியை சேர்ந்த, தனியார் பஸ் டிரைவர் சந்தோஷ், 30, என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் சந்தோஷ் மற்றும் வனிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு வனிதா தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம், மாமியார் வீட்டுக்கு சென்ற சந்தோஷ், குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், வனிதா செல்ல மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்தோஷ், வனிதாவின் அண்ணன் யுவராஜை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், யுவராஜுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர், யுவராஜை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகார்படி, பரமத்தி போலீசார், நேற்று, சந்தோஷை கைது செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

