ADDED : பிப் 17, 2025 03:45 AM
நடந்து சென்ற மூதாட்டியிடம்
5 பவுன் செயின் பறிப்பு
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, வெள்ளையன்காடு, பி.மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் ருக்மணி, 82; இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு, திருச்செங்கோடு உழவர் சந்தையில் அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு, அவரது வீட்டின் அருகே டவுன் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், மூதாட்டியின் கழுத்தில் இருந்த, ஐந்து பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். மூதாட்டி அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நிதி நிறுவன மாடியில் தீகுமாரபாளையம்: குமாரபாளையம் - சேலம் சாலை, சரவணா தியேட்டர் எதிரே உள்ள நிதி நிறுவன மாடியில், நேற்று முன்தினம் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. குமாரபாளையம் தீயணைப்பு துறையினர், தீயை போராடி அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, குமாரபாளையம் போலீசார் தெரிவித்தனர்.
டூவீலர் மீது பஸ் மோதிகல்லுாரி ஆசிரியர் பலி
குமாரபாளையம்: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, நாட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் ரகுகுமார், 36; ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி ஆசிரியர். இவர், நேற்று மதியம், 1:15 மணிக்கு, 'ஹீரோ சூப்பர் ஸ்பிளண்டர்' டூவீலரில், உறவினரான லாரி டிரைவர் சசிகுமார், 34, என்பவருடன் சென்றார். குமாரபாளையம் அருகே, கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலத்தின் கீழ் நுழைந்து வெளியில் வரும் போது, அந்த வழியாக வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு ரகுகுமார் உயிரிழந்தார். சசிகுமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேகத்தடையில் தடுமாறிவிழுந்த மாணவர் பலி
மல்லசமுத்திரம்,: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் முனிராஜ் மகன் லோகித்குமார், 20; விருத்தாச்சலம் மாவட்டம், இருளகுறிச்சியை சேர்ந்தவர் அபினேஷ், 21; இவர்கள் மல்லசமுத்திரம் அருகேயுள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாமாண்டு பி.காம்., சி.ஏ., படிக்கின்றனர். வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் மாலை, நண்பன் பிரசாந்த், 20, என்பவரின், 'யமஹா
எம்.டி., 15' என்ற டூவீலரை எடுத்துக்கொண்டு, மற்றொரு நண்பனான இடைப்பாடியை சேர்ந்த குருமூர்த்தி, 21, என்பவரை அவரது வீட்டில் இறக்கிவிட்டனர்.
பின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். இரவு, 9:30 மணிக்கு இருகாலுார் ரயில்வே கேட் அருகே சென்றபோது, அங்கிருந்த வேகத்தடையில் டூவீலர் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் இருந்து கீழே விழுந்த லோகித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபினேஷ் தலையில் பலத்த காயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.