sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சில வரி செய்திகள்: நாமக்கல் மாவட்டம்

/

சில வரி செய்திகள்: நாமக்கல் மாவட்டம்

சில வரி செய்திகள்: நாமக்கல் மாவட்டம்

சில வரி செய்திகள்: நாமக்கல் மாவட்டம்


ADDED : பிப் 17, 2024 12:53 PM

Google News

ADDED : பிப் 17, 2024 12:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கந்தசாமி கோவிலில் வழிபாடு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. மாசி வளர்பிறை கிருத்திகையையொட்டி, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் என பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், வையப்பமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

பள்ளி செல்லா குழந்தைகள் 120 பேர் கண்டுபிடிப்பு

மல்லசமுத்திரம்: நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவுப்படி, நாமக்கல் தணிக்கைதுறை இயக்குனர் உமா தலைமையில் மல்லசமுத்திரம் யூனியனுக்குட்பட்ட பருத்திபள்ளி, ராமாபுரம், அவிநாசிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிசெல்லா குழந்தைகளை வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இதில், பள்ளி செல்லா மற்றும் பள்ளிக்கு நீண்டநாட்களாக விடுப்பெடுத்த, அரையாண்டு தேர்விற்கு வராத என மொத்தம், 120 மாணவர்கள் கண்டறியப்பட்டனர். இதில், 15 மாணவர்கள் பள்ளிக்கு வரவழைத்தனர். மற்ற மாணவர்கள் பள்ளிக்குவர அறிவுரை வழங்கப்பட்டது. வட்டாரக்கல்வி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சக்திவேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கார் மோதி விவசாயி பலி

ப.வேலுார்: நாமக்கல், வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் குழந்தைசாமி, 70; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, விவசாய பணிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, ப.வேலுாரில் இருந்து வேலகவுண்டம்பட்டி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். ப.வேலுார் பழைய பைபாஸ் சாலை, ராஜா திருமண மண்டபம் அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த மினி ஆட்டோ மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த குழந்தைசாமியை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ப.வேலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. 90 மூட்டைகள் வரத்தாகின. முதல் தரம் கிலோ, 72.90 ரூபாய் முதல், 83.70 ரூபாய், இரண்டாம் தரம், 59.20 ரூபாய் முதல், 69.70 ரூபாய் என, மொத்தம், 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்த ஏலம் வரும், 23ல் நடக்கும் என, மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

மூலிகை பூச்சி விரட்டி வேளாண்துறை பரிந்துரை

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வேளாண்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வயல்களில் உள்ள பூச்சிகளை விரட்ட, பெரும்பாலும் கெமிக்கல் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம்.

ஆனால், இயற்கையாக மூலிகை தயாரித்தும் விவசாய பயிர்களை பாதிக்கும் பூச்சி களை விரட்டலாம். அதற்கு, ஆடு, மாடு சாப்பிடாத எருக்கு, கற்றாழை, நொச்சி, ஊமத்தை, துளசி, சீதா, வேம்பு போன்ற இலைகளை இடித்து, ஒரு கிலோ சாணம், 20 லிட்டர் மாட்டு கோமியம் கலந்து பானையில், 7 நாட்கள் வைக்க வேண்டும்.

இவ்வாறு வைத்திருக்கும் கரைசல், 7 முதல் 10 நாட்களில் நொதித்து மூலிகை சாறு தயாராகி விடும். 7 நாட்களுக்கு பின், ஒரு லிட்டர் கரைசலுக்கு, 10 லிட்டர் தண்ணீர் கலந்து அனைத்து பயிர்களுக்கும் மூலிகை பூச்சி விரட்டி தெளிக்கலாம். இதன் மூலம் செடிகளிடம் பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகள் வராது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us