/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நாமக்கல் முட்டைகள் ஓமன் நாட்டில் வினியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை'
/
'நாமக்கல் முட்டைகள் ஓமன் நாட்டில் வினியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை'
'நாமக்கல் முட்டைகள் ஓமன் நாட்டில் வினியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை'
'நாமக்கல் முட்டைகள் ஓமன் நாட்டில் வினியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை'
ADDED : டிச 20, 2024 01:01 AM
நாமக்கல், டிச. 20-
''நாமக்கல் முட்டைகளை ஓமன் நாட்டில் வினியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கோழிப்பண்ணை பொருட்கள் ஏற்றுமதி சங்க பொருளாளர் கேசவன் தெரிவித்தார்.
நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தினமும் சராசரியாக, 30 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கிடையே வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் அரசு, முட்டை இறக்குமதியில் கடந்த நவம்பர் மாதம் புதிய கொள்கையை கொண்டு வந்து, 60 கிராம் மற்றும் அதற்கு மேல் உள்ள எடை கொண்ட முட்டைகளை மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்தது.
இதனால் நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது கடந்த, இரு மாதங்களாக தடைப்பட்டது. இதற்கிடையே கடந்த, 4 நாட்களாக ஓமன் நாடும் இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி அளிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது. இதனால் ஓமன் நாட்டிற்கும், நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் முட்டை மற்றும் கோழிப்பண்ணை பொருட்கள் ஏற்றுமதி சங்க பொருளாளர் கேசவன் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு மாதம்தோறும், 150 கன்டெய்னர்களில் முட்டைகள் அனுப்பப்பட்டு வந்தன. கடந்த இரு மாதங்களாக முட்டை ஏற்றுமதி பாதியாக குறைந்துவிட்டது. மேலும் கத்தார் அரசு, 60 கிராம் கொண்ட முட்டைகளை மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என அறிவித்து விட்டது.
இதன்தொடர்ச்சியாக ஓமன் நாட்டிலும், தேவைக்கு மட்டுமே இந்திய முட்டைகளை இறக்குமதி செய்வதாக அறிவித்து முட்டை இறக்குமதிக்கான அனுமதியை நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் ஓமன் நாட்டின் சோகார் துறைமுகத்தில் கடந்த, 10 நாட்களாக, நாமக்கல்லில் இருந்து, 41 கன்டெய்னர்களில் அனுப்பட்ட, 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த, ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், பார்லி.,யில், 'முட்டைகளை ஓமன் நாட்டிற்குள் அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினார். இதன் காரணமாக மத்திய அரசு, ஓமன் நாட்டு, அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வரும், 22ம் தேதி, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, நாமக்கல் முட்டைகளை ஓமன் நாட்டில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே கோழிப் பண்ணையாளர்கள், முட்டை ஏற்றுமதியாளர்கள் அச்சம் அடைய வேண்டாம். விரைவில் இதற்கான தீர்வு கிடைத்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.