/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துர்நாற்றம் வீசும் மந்தைவெளி குட்டை
/
துர்நாற்றம் வீசும் மந்தைவெளி குட்டை
ADDED : செப் 04, 2025 02:19 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்தில், நெ.3.கொமராபாளையம் பஞ்., அமைந்துள்ளது. குடியிருப்பு பகுதி அருகிலேயே மந்தைவெளி குட்டை உள்ளது. இந்த குட்டையில் மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால், இப்பகுதியில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும்.
தற்போது, இந்த குட்டை போதிய பராமரிப்பு இல்லாததால் செடிகள் வளர்ந்து, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தொழிற்சாலையின் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: குடியிருப்பு அருகிலேயே மந்தைவெளி குட்டை உள்ளது. இந்த குட்டையில் மக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் மற்றும் அருகில் செயல்படும் தனியார் தொழிற்சாலையின் கழிவு நீர் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் கொண்டுவந்து விடப்படுகிறது. இதனால் குட்டையில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மந்தைவெளி குட்டையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.