ADDED : நவ 29, 2025 01:38 AM
நாமகிரிப்பேட்டை,கோடைகாலம் தொடங்கியதும், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும். இதை சமாளிக்க, விவசாயிகள் வைக்கோல் கட்டுகளை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வர். முக்கியமாக, வட தமிழகம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கிடைக்கும் வைக்கோல் கட்டுகளை, நாமக்கல், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வர். கடந்த ஏப்.,ல் தீவன தட்டுப்பாடு இருந்ததால், வைக்கோல் கட்டு ஒன்று, 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, மழைக்காலம் தொடங்கி விட்டதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் அதிகளவு கிடைக்க தொடங்கியதால், வைக்கோல் தேவை குறைந்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில், நேற்று வைக்கோல் வண்டிகள் வந்தும் விவசாயிகள் வாங்கவில்லை. இதனால், தேவை குறைந்து வைக்கோல் ஒரு கட்டு, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முக்கியமாக, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, மெட்டாலா ஆகிய பகுதிகளில், வைக்கோல் வண்டிகள் வந்து நின்று விற்பனையாகாமல் திரும்பி சென்றன.

