/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரும்பு டன்னுக்கு ரூ.3,151 அறிவிப்பு; 'யானை பசிக்கு சோளப்பொரி' என அதிருப்தி
/
கரும்பு டன்னுக்கு ரூ.3,151 அறிவிப்பு; 'யானை பசிக்கு சோளப்பொரி' என அதிருப்தி
கரும்பு டன்னுக்கு ரூ.3,151 அறிவிப்பு; 'யானை பசிக்கு சோளப்பொரி' என அதிருப்தி
கரும்பு டன்னுக்கு ரூ.3,151 அறிவிப்பு; 'யானை பசிக்கு சோளப்பொரி' என அதிருப்தி
ADDED : மார் 05, 2025 06:24 AM
நாமக்கல்: 'தமிழக அரசு அறிவித்துள்ள கரும்புக்கான கொள்முதல் விலை, 'யானை பசிக்கு சோளப்பொரி' போல் உள்ளது. இந்த விலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், 2024--25ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கான கொள்முதல் விலையை உயர்த்தி, அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது. 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு, டன் ஒன்றுக்கு, 3,151 ரூபாய் என்றும், 9.85 சதவீதம் சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு, 3,267 ரூபாய் என்றும், 10.10 சதவீதம் சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு, 3,344.20 ரூபாய், 10.65 சதவீதம் சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு, 3,532.80 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரும்பை பொறுத்தவரையில், ஒவ்வொரு பருவத்திற்கும் கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும். அதனை அடிப்படையாக கொண்டு, மாநில அரசு ஆதார விலையை சேர்த்து விலையை அறிவிக்கும். தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ், 12 சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை, 16 தனியார் சர்க்கரை ஆலைகள் என, 30 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன், 'கரும்பு விவசாயிகளுக்கு, கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும்' என, வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்துள்ளது.
ஆட்சி அமைத்து, நான்காண்டுகள் ஆகியும், தற்போது கரும்பு டன் ஒன்றுக்கு, 116 ரூபாய் மட்டுமே விலை உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது. இது, விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போதைய நிலையில், கரும்பு உற்பத்திக்கான செலவினங்களை ஒப்பிடும்போது, விவசாயிகளுக்கு இது கட்டுப்படியான விலையாக இல்லை. 'யானை பசிக்கு சோளப்பொரி' கொடுப்பது போல் உள்ளது.
இதன்மூலம், பல கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை கைவிட்டு, மாற்று பயிர் சாகுபடிக்கு சென்றுவிடுவர். தமிழகத்தில் கரும்பு சாகுபடி குறைந்தால், சர்க்கரை ஆலைகள் மேலும் பாதிக்கப்படும். அதனால், தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, அரசு கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இது கட்டுப்படியான விலையாக இல்லை. இதன்மூலம், பல கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை கைவிட்டு, மாற்று பயிர் சாகுபடிக்கு சென்றுவிடுவர். தமிழகத்தில் கரும்பு சாகுபடி குறைந்தால், சர்க்கரை ஆலைகள் மேலும் பாதிக்கப்படும்