/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., கூட்டணியில் 8 தொகுதி தமிழ் புலிகள் கட்சி வலியுறுத்தல்
/
தி.மு.க., கூட்டணியில் 8 தொகுதி தமிழ் புலிகள் கட்சி வலியுறுத்தல்
தி.மு.க., கூட்டணியில் 8 தொகுதி தமிழ் புலிகள் கட்சி வலியுறுத்தல்
தி.மு.க., கூட்டணியில் 8 தொகுதி தமிழ் புலிகள் கட்சி வலியுறுத்தல்
ADDED : நவ 14, 2025 02:25 AM
நாமக்கல், 'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 8 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, தமிழ் புலிகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஈரோட்டில் ஜன.,4-ல், தமிழ் புலிகள் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான மாநாடு ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர்கள் குமரவேல், வினோத்சேகுவேரா ஆகியோர் வரவேற்றனர். தமிழ் புலிகள் கட்சி நிறுவன தலைவர் நாகை.திருவள்ளுவன், ஈரோடு மாநாடு குறித்து கட்சியினரிடையே பேசினார்.
தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோட்டில் ஜன., 4-ல், 'வெல்லும் தமிழ்நாடு' என்ற மாநாடு நடத்த உள்ளோம். இதில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது. அதை தடுப்பதற்கு தமிழ் புலிகள் கட்சி போராடும்.
சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் அனைத்திலும் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறோம். அருந்ததியர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிய முதல்வர், அரசியலிலும் இட ஒதுக்கீட்டை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.
சட்டசபை தேர்தலில், 8 தொகுதிகளை தமிழ் புலிகள் கட்சிக்கு தி.மு.க., தலைமை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட, தனி தொகுதிகள் சிலவற்றை கேட்க விரும்புகிறோம். ஈரோடு மாநாடு தி.மு.க., கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வழிவகுப்பதாக அமையும். 2024 லோக்சபா தேர்தலையொட்டி, நாமக்கலில் நடந்த மாநாட்டில் அப்போது நாங்கள் வைத்த கோரிக்கைகள் சிலவற்றை, தி.மு.க., அரசு நிறைவேற்றி கொடுத்துள்ளது. துாய்மை பணியாளர்களை தமிழக அரசு நிரந்தரம் செய்து, அவர்களுக்கு உண்டான உரிமைகளை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

