/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் பசுமை பரப்பை அதிகரிக்க 9 லட்சம் மரக்கன்று நட இலக்கு: கலெக்டர்
/
நாமக்கல்லில் பசுமை பரப்பை அதிகரிக்க 9 லட்சம் மரக்கன்று நட இலக்கு: கலெக்டர்
நாமக்கல்லில் பசுமை பரப்பை அதிகரிக்க 9 லட்சம் மரக்கன்று நட இலக்கு: கலெக்டர்
நாமக்கல்லில் பசுமை பரப்பை அதிகரிக்க 9 லட்சம் மரக்கன்று நட இலக்கு: கலெக்டர்
ADDED : ஏப் 29, 2025 01:39 AM
நாமக்கல்:
''நாமக்கல் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க, ஒன்பது லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த திறன் பயிற்சி முகாம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
ஊரக வளர்ச்சித்துறை சார்பில், இயற்கையை பாதுகாக்கும் வகையில், பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், குட்டைகள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றம் காரணமாக அதிக மழைப்பொழிவு, அதிக வெப்பம் காரணமாக பல்லுயிர் பரிணாமத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல்வேறு புதிய நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. இதை முற்றிலும் குறைக்க வேண்டும். இச்சூழலில் மாசுபாட்டை சமன் செய்ய இயற்கை வளத்தை மேம்படுத்த அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில், தற்போது, 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. இதை, 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே, காலநிலை சீராக அமையும். நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், உதவி திட்ட அலுவலர் அன்புச்செல்வன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி தாவரவியல் துறை இணை பேராசிரியர் வெஸ்லி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

