ADDED : செப் 09, 2024 06:51 AM
குமாரபாளையம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், பள்ளிப்பாளையம் ஒன்றிய செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
மாநில பொருளாளர் முருக செல்வராசன் பங்கேற்றார். இதில், மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம், தமிழகத்தின் இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியருக்கும், 2006 ஜூன், 1 முதல் வழங்க வேண்டும். ஆசிரியர்,-அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003 ஏப்., 1 முதல் தொடர வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, விடுப்பூதியம் பெறும் முறையை தொடர வேண்டும். 'டிட்டோஜாக்' சார்பில், நாளை நடக்கும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய செயலாளர் இளையராஜா, தகவல்தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் வடிவேல், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின், மாவட்ட அமைப்பாளர் தண்டபாணி, ஒன்றிய பொருளாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.