/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெப்பம் 102 டிகிரிக்கும் அதிகமாகும்
/
வெப்பம் 102 டிகிரிக்கும் அதிகமாகும்
ADDED : ஏப் 03, 2024 07:44 AM
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த, 5 நாட்களில் வெயில் அதிகரிக்கும், வெப்பநிலை, 102 டிகிரியை தாண்டும் என, வானிலை ஆலோசனை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் நிலவியது. இன்று (3) முதல் 7ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை, 102.2 டிகிரி வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 20 முதல், 70 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் தென் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 8 முதல், 10 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
கறவை மாடுகள் அதிக வெப்பநிலை காரணமாக அயற்சிக்கு ஆளாகின்றன. வெயில் நேரங்களில் கால்நடைகளை மேய விடக்கூடாது. குளிர்ந்த நேரங்களில், கறவை மாடுகளுக்கு போதுமான அளவு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு, 100 கிராம் அளவு மாவுச்சத்து பொருட்களான மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற தானியங்களை அரைத்து கலப்பு தீவனத்துடன் கலந்து கொடுப்பதால், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவை அதிகரிக்க முடியும். நாள் முழுவதும் தரமான குடிநீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும். வெயில் நேரங்களில் கறவை மாடுகளின் மேல் தண்ணீர் தெளிக்கலாம். நல்ல காற்றோட்டமுள்ள மர நிழலில் கட்டுவது வெயிலினால் ஏற்படும் அயற்சியை குறைக்க உதவும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

