/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறும் விண்ணப்பத்துக்கு 45 நாளில் தீர்வு: எம்.பி.,
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறும் விண்ணப்பத்துக்கு 45 நாளில் தீர்வு: எம்.பி.,
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறும் விண்ணப்பத்துக்கு 45 நாளில் தீர்வு: எம்.பி.,
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறும் விண்ணப்பத்துக்கு 45 நாளில் தீர்வு: எம்.பி.,
ADDED : ஜூலை 16, 2025 01:31 AM
நாமக்கல், ''உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.
தமிழகம் முழுவதும், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம், நேற்று துவங்கியது. அதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம், மாநகராட்சிக்குட்பட்ட சின்னமுதலைப்பட்டி சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, டி.ஆர்.ஓ., சுமன், கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.பி., ராஜேஸ்குமார் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது, முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு, உதவித்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, வருமானம் மற்றும் இருப்பிடம் சான்றுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் திட்டமான, 'உங்களுடன் ஸ்டாலின்', திட்டத்தை, தமிழக முதல்வர், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் துவங்கி வைத்துள்ளார். அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், ஆறு இடங்களில் இந்த முகாம் நடக்கிறது.
இம்முகாம், வரும் செப்., 30 வரை நடக்கிறது. ஒரு மணி நேரத்தில், 60க்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முகாம் குறித்து பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும், ஆதரவும் உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பெறும் கவுன்டரில், 200க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். முழுமையான விசாரணைக்கு பின், தகுதியான நபர்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி துணை மேயர் பூபதி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.