ADDED : ஜூன் 06, 2026 05:10 AM

வெண்ணந்துார்:சேர்வராயன்
மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம் மாநகர்
மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக பாய்ந்து
காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆறு வெண்ணந்துார் ஊராட்சி
ஒன்றியத்துக்குட்பட்ட மதியம்பட்டி, அக்கரைப்பட்டி,
தொட்டியபட்டி பகுதி வழியாகவும் செல்கிறது. இந்நிலையில், ஆற்றின்
நீர் கருமை நிறத்தில் காணப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும்
அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சாயக்கழிவுகள்
மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலப்பதே இதற்கு
காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஆற்றுநீரை
நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீரின்
தரமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கால்நடைகளுக்கும்
பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே,
திருமணிமுத்தாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்கவும், நீரின் தரத்தை
ஆய்வு செய்து மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட
துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
