/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர், பதுக்கிய அரவை மில் உரிமையாளர் கைது: 900 கிலோ பறிமுதல்
/
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர், பதுக்கிய அரவை மில் உரிமையாளர் கைது: 900 கிலோ பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர், பதுக்கிய அரவை மில் உரிமையாளர் கைது: 900 கிலோ பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர், பதுக்கிய அரவை மில் உரிமையாளர் கைது: 900 கிலோ பறிமுதல்
ADDED : மே 26, 2024 07:13 AM
நாமக்கல் : ரேஷன் அரிசி கடத்திய வாலிபரையும், பதுக்கி வைத்திருந்த அரவை மில் உரிமையாளரையும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து, 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, எஸ்.ஐ., ஆறுமுகநயினார், சிறப்பு எஸ்.ஐ., ஜானகிராமன் ஆகியோர் தலைமையில், போலீசார் கோவிந்தராஜ், பிரகாசம் ஆகியோர் அடங்கிய குழுவினர், நாமக்கல் மாவட்டம், வெள்ளாளப்பட்டி முத்துக்குமார் என்பவரின் மாவு அரவை மில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த மாருதி ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 12 மூட்டைகளில், 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், தத்தாத்திரிபுரம் அடுத்த செம்மங்குளம்புதுாரை சேர்ந்த நடராஜன் மகன் தட்சிணாமூர்த்தி, 28, என்பது தெரியவந்தது. மேலும், பொது மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி, அவற்றை வெள்ளாளப்பட்டி அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மாவு அரவை மில்லில் கொடுத்து, மக்காச்சோளம், சோளம், கம்பு போன்ற தீவன பொருட்களுடன் கலந்து அரைத்து, மாட்டு தீவனமாக அரைத்து பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, முத்தக்குமார் மாவு அரவை மில்லில் சோதனை செய்தபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், ரேஷன் அரிசியை கடத்திய தட்சணாமூர்த்தி, மாவு மில் உரிமையாளர் முத்துக்குமார் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 900 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய, மாருதி ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.