/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிளிமூக்கு கோழிகளுக்கு வெளிநாடுகளில் கிராக்கி
/
கிளிமூக்கு கோழிகளுக்கு வெளிநாடுகளில் கிராக்கி
ADDED : ஜன 15, 2025 12:44 AM

நாமகிரிப்பேட்டை; 'கிளி மூக்கு' கோழிகளுக்கு வெளிநாடுகளில் கிராக்கி நிலவுவதால், விமானம் மூலம் ஏற்றுமதி செய்து செய்கின்றனர். ஒரு கோழி, ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில், பாரம்பரியமாக விவசாயிகள் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர். முட்டை, இறைச்சிக்கு பயன்படுத்தி கொள்வதுடன், கனிசமான வருமானத்தையும் கோழி இனங்கள் பெற்று தருகின்றன.
தற்போது, அழகுக்காக வளர்க்கப்படும், கிளி மூக்கு கோழிகள், நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. நாட்டுக்கோழிகளில், குருவுக்கோழி, பெருவிடைக்கோழி, சண்டைக்கோழி என்னும் அசில் கோழி, கடக்கநாத் என்னும் கருங்கால் கோழி, கிராப்பு கோழி, கொண்டை கோழி, குட்டைக்கால் கோழி, கிளி மூக்கு கோழி ஆகிய இனங்கள் உள்ளன.
இவற்றில் முக்கியமாக, கிளி மூக்கு கோழிகளை மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால், நாமகிரிப்பேட்டை பகுதியில், கிளி மூக்கு கோழிகளை ஆர்வமுடன் வளர்த்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
கிளி மூக்கு கோழிகள், அதன் பெயருக்கேற்ப, அவற்றின் மூக்கு கிளிக்கு இருப்பது போல வளைந்து காணப்படும். வால், இறகுகள் நீண்டு வளரும். வளர்ந்த சேவல், 5 கிலோ வரை எடை இருக்கும். சேவல் உயரமாகவும் பலமாகவும் இருப்பதால், ஆந்திராவில் சண்டைக்கு பயன்படுத்துகின்றனர்.
கிளி மூக்கு கோழிகள், வண்ணங்களுக்கேற்ப மார்க்கெட்டில் விலை வைக்கப்படுகிறது. ஒரு மாதம் வயதுடைய கோழிக்குஞ்சு ஜோடி, 15,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வளர்ந்த சேவல் ஒன்று, ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.
இந்தியாவில், மேற்கு வங்கம், ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இங்கிருந்து கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. முக்கியமாக நாமகிரிப்பேட்டையில் வளர்க்கப்படும், கிளி மூக்கு கோழிகள், விமானம் மூலம் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், கென்யா, ஈராக், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து, நாமகிரிப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் கூறியதாவது: கிளி மூக்கு கோழிகளுக்கு கடலை பருப்பு, மக்காச்சோளம், பாதம், முந்திரி கொடுத்து வளர்க்கிறோம். வெளி மாநிலம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிகளவு விரும்பி வாங்கி செல்கின்றனர்.
ஓராண்டாக சிங்கப்பூர், மலேஷியா, கென்யா, ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, குறிப்பிட்ட வாரங்கள் இடைவெளியில் ஏற்றுமதி செய்கிறோம். ஒரு கோழியை விமானத்தில் அனுப்ப, 36,000 ரூபாய் வரை செலவாகிறது. நாமகிரிப்பேட்டை பகுதியில் வளர்க்கப்படும் கிளி மூக்கு கோழிகளுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.