/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாயக்கழிவால் நுரை பொங்கும் திருமணிமுத்தாறு
/
சாயக்கழிவால் நுரை பொங்கும் திருமணிமுத்தாறு
ADDED : ஜன 28, 2025 06:56 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அடுத்த மதியம்பட்டி வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் சாக்கடை, சேகோ, சாயக்கழிவு நீர் கலப்பதால், கருமை நிறத்துடன், நுரை பொங்கியபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரத்தில் இருந்து திருமணிமுத்தாறு தொடங்கி, சேலம் நகர் பகுதி, ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, எலச்சிபாளையம், பரமத்தி வேலுார் வழியாக சென்று, இறுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்நிலையில், வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. இதில், சாக்கடை, சாயக்கழிவு, சேகோ கழிவுநீர் கலப்பதால், ஆற்றில் கருமை நிறத்தில், நுரையுடன் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. மேலும், கோழிக்கழிவுகளை மூட்டை, மூட்டையாக திருமணிமுத்தாற்றில் கொட்டிச்செல்கின்றனர். இங்கு மீன் பிடிப்பவர்கள், உள்ளூரில் மீன்களை வாங்க மாட்டார்கள் என்பதால், வெளியூர்களுக்கு சென்று அங்கு விற்பனை செய்கின்றனர். திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி கூறியதாவது: கடந்த, 12 நாட்களுக்கு முன், திருமணிமுத்தாற்றில் நுரை, துர்நாற்றம் வீசியது. இதேபோல், நேற்று முன்தினம் முதல் நுரை மற்றும் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. ஆற்றில் இறங்கினால் தோல் அரிப்பு ஏற்படுகிறது. மேலும், ஆற்றில் உள்ளூர் நபர்கள் மீன் பிடிப்பதில்லை. மாறாக வெளியூரை சேர்ந்த நபர்கள் மீனை பிடித்து வெளியூரில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த மீனை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

