ADDED : மே 27, 2026 04:15 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள், 3 பேர் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின், சுவாமியின் கருவறைக்கு பின்புறத்தில் உள்ள சுவாமி சிலையை துாக்கி அமர வைக்க பயன்படுத்தும், 30 கிலோ கொண்ட, இரண்டு நாற்காலியும், நாற்காலியின் கீழே மஞ்சள் துணியில் சுத்தி வைக்கப்பட்டிருந்த, 3,000 ரூபாய் பணத்தையும் திருடி சென்றனர்.
காலையில் கோவிலுக்கு வந்த, கோவில் நிர்வாகிகள் சுவாமி நாற்காலியும், பணமும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 24, ஜீவா, 24, மணிகண்டன், 20, ஆகிய மூன்று பேர் சுவாமி சாமி நாற்காலியும், பணத்தையும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும், நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
