/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாழவந்தி போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு கொல்லிமலை, செங்கரை பகுதி மக்கள் விரக்தி
/
வாழவந்தி போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு கொல்லிமலை, செங்கரை பகுதி மக்கள் விரக்தி
வாழவந்தி போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு கொல்லிமலை, செங்கரை பகுதி மக்கள் விரக்தி
வாழவந்தி போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு கொல்லிமலை, செங்கரை பகுதி மக்கள் விரக்தி
ADDED : செப் 07, 2025 12:46 AM
ராசிபுரம் :வாழவந்தி போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அதனால் எந்த பயனும் இல்லை என, செங்கரை மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. 50 கி.மீ., பரப்பளவில் உள்ள கொல்லிமலைக்கு வாரந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இங்கு சாராய ஊறல், நாட்டுத்துப்பாக்கி ஆகியவை புழக்கத்தில் உள்ள பகுதியாகும். இதனால், கொல்லிமலையில், வாழவந்திநாடு போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. சேந்தமங்கலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சேந்தமங்கலம் மட்டுமின்றி, கொல்லிமலையையும் கவனித்து வந்தார்.
மேலும், வாழவந்திநாடு கிராமம், கொல்லிமலையில் தெற்கு முனையில் இருப்பதால் மற்ற இடங்களில் இருந்து இப்பகுதிக்கு பொதுமக்கள் வர சிரமப்பட்டனர். இதனால், செங்கரையில் ஒரு எஸ்.ஐ., தலைமையில் போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. செங்கரையில் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டாலும், 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கன்ட்ரோலில் தான் ஸ்டேஷன் இருந்தது. இதனால், கொல்லிமலை வாழவந்திநாடு ஸ்டேஷனை, இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக தரம் உயர்த்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் வாழவந்திநாடு ஸ்டேஷன் உள்பட மாவட்டத்தில் உள்ள, ஆறு போலீஸ் ஸ்டேஷன்களை தரம் உயர்த்தி, இன்ஸ்பெக்டரை நியமனம் செய்தது. வாழவந்திநாடு ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டு, செல்வலட்சுமி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தரம் உயர்த்தப்பட்ட பின் ஸ்டேஷன் எல்லைகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
வாழவந்திநாடு போலீஸ் ஸ்டேஷனுக்கு மட்டும், புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பழையபடி, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் தான் செங்கரை ஸ்டேஷனுக்கு சர்க்கிள் இன்ஸ்பெக்டராக செயல்படுவார். 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாழவந்திநாடு இன்ஸ்பெக்டர், அந்த ஸ்டேஷனை மட்டுமே கவனிப்பார். மேலும், செங்கரை ஸ்டேஷனுக்கு, முள்ளுக்குறிச்சி வரை எல்லைகள் உள்ளன.
இதனால், செங்கரை ஸ்டேஷன் எல்லையில் ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால், 50 கி.மீ., துாரத்திற்கு இன்ஸ்பெக்டர் வர வேண்டும். வாழவந்திநாடு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டால், செங்கரை பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், வாழவந்திநாடு ஸ்டேஷன் தரம் உயர்த்தி இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டும், எந்த பயனும் இல்லை என, அப்பகுதி மக்கள் சலிப்புடன் தெரிவித்தனர். வாழவந்தி நாடு இன்ஸ்பெக்டரை சர்க்கிள் இன்ஸ்பெக்டராக அறிவித்து, செங்கரை ஸ்டேஷனையும் சேர்த்து கவனித்தால் தான் பயனுள்ளதாக இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.