/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக., 2ல் வல்வில் ஓரி விழா: சிறப்பாக நடத்த துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுகோள்
/
ஆக., 2ல் வல்வில் ஓரி விழா: சிறப்பாக நடத்த துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுகோள்
ஆக., 2ல் வல்வில் ஓரி விழா: சிறப்பாக நடத்த துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுகோள்
ஆக., 2ல் வல்வில் ஓரி விழா: சிறப்பாக நடத்த துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுகோள்
ADDED : ஜூலை 13, 2025 02:07 AM
நாமக்கல், ''ஆக., 2ல் துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கும் வல்வில் ஓரி விழா சிறப்பாக நடக்க, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி ஆகிய விழாக்கள், தமிழக அரசு சார்பில் நடப்பதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை போற்றிடும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம், 17, 18 ஆகிய இரண்டு நாட்கள், தமிழக அரசு சார்பில், வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இந்தாண்டும், வரும் ஆக., 2, 3 என, இரண்டு நாட்கள், அரசு சார்பில், வல்வில் ஓரி விழா கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் வல்வில் ஓரி விழாவையொட்டி, பல்வேறு துறை சார்பில், கண்காட்சி அரங்குகள் அமைக்க வேண்டும். வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி விழாவை, பசுமை திருவிழாவாக சிறப்பாக நடத்த துறை அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடும் வகையில், சோதனை மேற்கொள்ள வேண்டும். மது அருந்தி வாகனங்கள் இயக்குவதை தடை செய்தல், பாதுகாப்பு ரோந்து பணிகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும். வல்வில் ஓரி விழா சிறப்பாக நடக்க, அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அருளரசு, ஆர்.டி.ஓ., சுகந்தி, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அபராஜிதன், துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

