ADDED : ஆக 01, 2026 06:18 AM

ராசிபுரம்:விவசாயிகள்
மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில்
காய்கறி விதை பொட்டலங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
தோட்டக்கலைத்துறை
மூலம் ஆடிப்பட்ட காய்கறி விதை தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டு
வருகிறது. இந்த விதை தொகுப்பில் வெண்டை, தக்காளி, முருங்கை, சுரைக்காய்,
கத்தரி, பீர்க்கன்காய், புடலை, கீரை ஆகிய, எட்டு வகையான விதைகள்
அடங்கியுள்ளன. இந்த தொகுப்பு முழுவிலையில் ரூபாய், 80 என அனைத்து
வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் வினியோகம்
செய்யப்படுகிறது.
மேலும், இதில் பயனாளிகள் முழு தொகுப்பாகவோ
அல்லது தனித்தனி விதை பொட்டலங்களாகவோ பெற்றுக்கொள்ளலாம். இதில்
விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களும் பெற்று
பயனடையலாம்.
இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குனர்
புவனேஸ்வரி கூறுகையில், ''இவ்விதைகளை பெற விரும்புவோர் அந்தந்த
வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி
பயன்பெறலாம்,'' என்றார்.
