/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
/
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 16, 2025 01:27 AM
நாமக்கல், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குடும்ப நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் ஜூலை, 11ல், 'உலக மக்கள் தொகை தினம்' அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு, 'ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு, திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். கல்லுாரியில் துவங்கிய பேரணி, பாரத ஸ்டேட் வங்கி, மோகனுார் சாலை, மணிக்கூண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், திருச்சி சாலை வழியாக சென்று, மீண்டும் கல்லுாரியில் முடிந்தது.
பேரணியில், 'பிறப்பு விகிதத்தை குறைக்க பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்; பெண்ணுக்கு, 21 வயதுக்கு பின் திருமண ஏற்பாடு செய்வோம்; சத்துணவை இனம் கண்டு உண்போம்; உடல், உள்ளம், சுற்றுப்புறத்தை துாய்மைப்படுத்துவோம்; பிறப்பை கட்டுப்படுத்தும் செய்தியும், சாதனமும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையத்தில் பெறுவீர், பயனடைவீர்; பெண் சிசு கொலையையும் தடுத்து, பெண் குழந்தையை பேணி காப்போம்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
தொடர்ந்து, கல்லுாரி கலையரங்கில், மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படக்கூடிய தாக்கம்; ஆணும், பெண்ணும் சமம்; பெண் கல்வியின் முக்கியத்துவம்; இளம்வயது திருமணத்தை தவிர்த்தல்; இளம் வயது கர்ப்பத்தை தவிர்த்தல்; பெண் பாலின விகிதத்தை அதிகரிப்பது மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
நடந்தது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, தொழுநோய் திட்ட துணை இயக்குனர் ஜெயந்தினி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.